கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இந்தி மொழியில் இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் கோவை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ராஜகோபாலன் சுன்கரா வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் 100 வார்டுகளில் 7,69,397 ஆண்கள், 7,68,736 பெண்கள் மற்றும் 278 மூன்றாம் பாலினத்தவர் என 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் கோவை தெற்கு தொகுதி வார்டு எண் 69 மற்றும் சாவடி எண் 842ல் பாரதி பார்க் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் பெயர் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. அவரது தந்தை பெயரும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதையொட்டி பலர் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
கோவை மாநகராட்சி ஆணையர் இது குறித்து, “கடந்த சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலிலும் இந்த வாக்காளர் பெயர் இந்தியில் தான் இருந்தது. அதை நாங்கள் இறுதி செய்து வார்டு வாரியாக வெளியிட்டுள்ளோம். எங்களுக்கு இந்தியில் பெயர் உள்ளதற்கும் தொடர்பு இல்லை. வாக்காளர் விண்ணப்பம் அளித்து பெயரை தமிழில் மாற்றிக் கொள்ளலாம்” என அறிவித்துள்ளார்.