டெல்லி: 70% மேற்பட்ட  பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ள இந்தியாவில், இன்னும் 50% பெண்கள் மாதவிடாய் காலத்தில், நாப்கின்களுக்கு பதிலாக துணிகளையே பயன்படுத்தி வருவதாக  தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்கள் மாதவிடாய் நாட்கள் அதிகபட்ச சுத்தமாக இருக்க சுகாதாரத்துறை நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த காலக்கட்டத்தில், சுகாதாரமான நாப்கின்கள் உபயோகிப்பது, சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, மன அழுத்தமின்றி இருப்பது போன்றவையும் கடைப் பிடிக்கப்பட வேண்டும். தினமும் இருவேளை குளிப்பது, ரத்தப் போக்கு இருக்கிறதோ, இல்லையோ குறிப்பிட்ட இடைவெளிகளில் நாப்கின்களை மாற்றுவது, சிறுநீர், மலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் அந்தரங்க உறுப்புகளை (சோப் உபயோகிக்காமல்) சுத்தமான தண்ணீர்கொண்டு கழுவுவது, தொடைப் பகுதியையும் அந்தரங்க உறுப்பையும் ஈரமின்றி வைத்துக்கொள்வது… இவை அனைத்தும் மாதவிலக்கு நாள்களில் ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்திய பெண்களில் 50சதவிகிதம் பேர் மாதவிடாய் காலங்களில் சுகாதாரத்தை பேணுவதில்லை என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குடும்ப சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள்,  பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் பெண்களுக்கான மாத விடாய் நாட்களில் உபயோகப்படுத்த இலவசமாக நாப்கின்களை வழங்கி வரும் நிலையில், இன்னும்  பெரும்பாலான பெண்கள் பழைய துணிகளையே மாதவிடாய் காலங்களில் உபயோகித்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தியாவின் கல்வியறிவு கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும்  ஒட்டுமொத்த கல்வியறிவு விகிதம் 77.7% ஆக உள்ளது என தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ)  தெரிவித்துள்ளது. அத்துடன்  நகர்ப்புறங்களை காட்டிலும்  கிராமப்புறங்களில் கல்வியறிவு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் எட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.  அத்துடன் இந்தியாவில், பெண்களின் கல்வியறிவு விகிதம் 70.3% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு விகிதம் 84.7% ஆகவும் உள்ளது. நகர்ப்புற மக்களில் கல்வியறிவு விகிதம் ஒட்டுமொத்தமாக 87.7% ஆக இருந்தது, கிராமப்புற கல்வியறிவு விகிதம் 73.5%ஆக உள்ளது. நகர்ப்புறங்களில் கூட பெண்களின் கல்வியறிவு ஆண்களின் கல்வியறிவைவிட பின்தங்கியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற கல்வியறிவு பெற்ற இந்தியாவில், பெண்கள் மாதவிடாய் காலங்களின்போது சுகாதரமற்ற முறையில் துணிகளை உபயோகித்து வருகின்றனர்.

தேசிய குடும்பநல சுகாதாரத்துறை, மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுகாதாரமாக இருக்கிறார்களா என்பது குறித்து  ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு  கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையில் நடத்தப்பட்டதாகவும்,  சுமார் 7 லட்சம் பெண்களிடமும், 1லட்சம் ஆண்களிடமும் இதுகுறித்து தகவல் கேட்டறிந்ததாக தெரிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், 15வயது முதல் 24வயதுடைய இளம்பெண்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் இன்னமும் நாப்கின்கள் உபயோகப்படுத்துவது இல்லை என்பதும், அவர்கள் பழைய துணிகளையே மாதவிடாய் காலங்களில் உபயோகப்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ நிபுணர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.