டில்லி

ந்தியாவில் இதுவரை 75 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் வருட இறுதியில் 43% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் மாண்டவியா மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியைப் பிரதமர் மோடி இந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார்.  முதலில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என இரு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பிறகு மேலும் சில மருந்துகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதையொட்டி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடெங்கும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் ஆகிறது.  அதையொட்டி இந்த வருட இறுதிக்குள் 75 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டது.   தற்போது அந்த இலக்கான 75 கோடியைத் தாண்டி உள்ளோம்.  இந்தியாவுக்குப் பிரதமர் மோடியுடன் இணைந்து  இதற்காக வாழ்த்து தெரிவிக்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள், “ மூன்றாம் அலை கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா குறைந்தது 60% மக்களுக்கு வருட முடிவுக்குள் 2 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும்.  அதாவது தினசரி 1.2 கோடி டோஸ்கள் போடப்படவேண்டும்.  அரசு வருட இறுதிக்குள் 200 கோடி டோஸ்கள் தடுப்பூசி போட வேண்டும்.

ஆனால் தற்போது தினசரி 77 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்படுகின்றன. அதாவது தினசரி 43 லட்சம் தடுப்பூசிகள் குறைகின்றன.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 53 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  நேற்று சுமார் 67 லட்சம் தடுப்பூசிகள் தினசரி இலக்கை விடக் குறைவாகப் போடப்பட்டுள்ளன.   இந்த வேகத்தில் சென்றால் இந்த வருட இறுதிக்குள் 43% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடியும்” எனத் தெரிவித்துள்ளனர்.