அகமதாபாத்,

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கான தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு நாடு முழுவதும் பதைபதைப்பை உருவாக்கிய கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மேல்முறையீட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 11 பேரின் தூக்கு தண்டனையும் தற்போது ஆயுள் தண்டனையாக மாற்றி குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ், குஜராத் கோத்ரா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இந்த கோர விபத்தில் அயோத்தியில் இருந்து திரும்பிய கரசேவகர்கள்  59பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதில் சுமார் 1044 பேர் உயிரிழந்தனர். மேலும் 2500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல அசம்பாவித சம்பவங்களும் நடை பெற்றன.

நாடு முழுவதும் பெரும் பதபதைப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், அப்போதைய முதல்வராக இருந்த மோடி மற்றும் அவரது நண்பர் அமித்ஷாமீதும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர்களை கோர்ட்டு விடுவித்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  31 பேரில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. மேலும், 20 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.