சென்னை: நடப்பு ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  இதுவரை ரூ.220.64 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் சொத்து பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. குறைந்தது 25சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 150 சதவிகிதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1915ன்படி சொத்து உரிமையாளர்களுக்கு அவர்களுடைய சொத்தின் மீது சொத்துவரி விதிக்கப்படுகிறது. அதன்படி,  சொத்து வரியானது ஒவ்வொரு அரையாண்டிற்கு ஒருமுறை செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் சொத்துவரி செலுத்த சொத்தின் உரிமையாளருக்கு தொலை பேசியில் குறுஞ்செய்தி அனுப்புதல், பத்திரிக்கைகளின் வாயிலாக அறிவிப்பு வழங்குதல் வானொலி, தொலைக்காட்சி வாயிலாக தகவல் தெரிவித்தல் மற்றும் வார்டு வரிவசூலிப்பவர் வாயிலாக வரி செலுத்த நேரில் அறிவுறுத்துதல் போன்ற பல்வேறு வழிமுறைகளில் சொத்துவரி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தில் 15 நாட்களுக்குள் வரி செலுத்தவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்ற விவரமும் சொத்து உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீண்ட நாட்களாக வரி செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்தின் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919ன்படி ஐப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கட்டிடத்தின் முன்பு ஜப்தி அறிவிப்பு வைக்கப்பட்டு நிலுவை வரியினை வசூலிக்க தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டம் 1854-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி வசூல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  சொத்துவரி நிலுவை வைத்துள்ள தனி நபர் கட்டிடங்கள் வணிக நிறுவனங்கள். ஒட்டல்கள் திருமண மண்டபங்கள் ஆகியவை மூடி சீல் வைக்கப்படுகிறது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தியவுடன் கட்டிடத்தின் சீல் அகற்றப்படுகிறது.

நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத 3 திருமண மண்டபங்கள், 6 ஹோட்டல்கள், 1 திரையரங்கம், 1 மருத்துவமனை, 4 வணிக வளாகங்கள் மற்றும் 107 வணிக அங்காடிகளுக்கு சீல் வைக்கப்பட்டும் 63 பெரிய நிறுவனங்களின் கட்டடங்களுக்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு வைக்கப்பட்டும் நிலுவை வரியினை உடனடியாக செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள தகவலில்,  சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக சொத்து வரியினை நீண்ட நாட்களாக செலுத்தாத நிறுவனங்கள் தங்களது சொத்து வரி நிலுவையினை செலுத்தியுள்ளன. இதன் காரணமாக கடந்த 15 நாட்களில் ரூ.40 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 2022 முதல் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.220.64 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மாநகராட்சி எல்லைக்குட்ட பகுதியிலுள்ள சொத்து உரிமையாளர்கள் உடனடியாக சொத்து வரியினை செலுத்தி சட்ட நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.