சென்னை,
பெற்றோர்கள் அரசு பள்ளிகள் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர். அரசு பள்ளிகள் மூலம் தான் அறம் சார்ந்த கல்வியை போதிக்க முடியும். எனவே, பெற்றோர்கள் நம்பிக்கையை பெரும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தமிழ்நாட்டில் கல்வித்தரம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், அரசு பள்ளிகளின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை தனியார் பள்ளி களுடன் ஒப்பிடும் போது 10 மடங்குக்கும் குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகியவை அண்மையில் வெளியிட்ட சில புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது அரசு தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் எந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன என்பதை அறிய முடிகிறது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 39,348 அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 32,053 பள்ளிகளில், அதாவது 81.46% அரசு பள்ளிகளில் 80-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களில் இருந்து அறிய முடிகிறது. அரசுத் தொடக்கப்பள்ளிகளை மட்டும் கணக்கில் கொண்டால் மொத்தமுள்ள 29,696 பள்ளிகளில் 3917 பள்ளிகளில் மட்டும் தான் 80&க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள 25,779 பள்ளிகளில், 80-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். இது மொத்தப்பள்ளிகளில் 86.81% என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகள் இருக்கும். ஒரு பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் ஒரு பிரிவு இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட ஒரு வகுப்பில் சராசரியாக 16 பேர் மட்டுமே இருக்க முடியும். ஒரு சில வகுப்புகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்றும், ஒட்டுமொத்த பள்ளியிலும் ஒற்றை இலக்கத்தில் மட்டும் மாணவர்கள் இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடுநிலைப் பள்ளிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. மொத்தமுள்ள 9587 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 3378 பள்ளிகளில் மட்டுமே 80&க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். மீதமுள்ள 6209 பள்ளிகளில் 80-க்கும் குறைவானவர்களே படிக்கின்றனர். அதாவது இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 10 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் கூட அரசு பள்ளிகளின் நிலை மோசமாகவே உள்ளது. உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 1379 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், அவற்றில் 50 பள்ளிகளில் மட்டுமே 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
கன்னியாக்குமரி மாவட்டத்தில் 599 பள்ளிகளில் 56 பள்ளிகளில் மட்டும் தான் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். தலைநகர் சென்னையில் 458 அரசு பள்ளிகளில் 25 பள்ளிகளில் மட்டும் தான் 80க்கும் கூடுதலான மாணவர்கள் உள்ளனர். அதைவிடக் கொடுமை என்னவென்றால் சென்னையில் 271 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றில் கூட 80 மாணவர்கள் இல்லை என்பது தான்.
தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்த நிலை என்றால் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கக்கூடும்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் நர்சரி பள்ளிகளில் குறைந்தபட்சம் 800 பேரும், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 1200 பேரும் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 மடங்கு குறைவாக உள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன் அனைத்து மாணவர்களும் அரசு பள்ளிகளில் தான் பயின்றனர். ஆனால், இப்போது கிட்டத்தட்ட 50% மாணவர்கள் தனியார் பள்ளிகளில் பயிலும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழக பெற்றோர்களில் பாதிப்பேர் அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதையே இது காட்டுகிறது. இது நல்லதல்ல.
அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், தேவையான இடங்களில் தேவையான அளவுக்கு ஆசிரியர்கள் இல்லாதது தான் இந்த நிலைக்குக் காரணம் ஆகும்.
அரசு பள்ளிகள் மூலம் தான் அறம் சார்ந்த கல்வியை போதிக்க முடியும். எனவே, அனைத்து அரசு பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதன் மூலமும், மாணவர்களின் கல்வி முன்னேற்றமே ஆசிரியர்களின் கடமை என்பதை உணர்த்துவதன் மூலமும் அனைத்து அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும்.
அனைத்துத் தரப்பு மாணவர்களும் தேடி வந்து அரசு பள்ளிகளில் சேரும் நிலையை தமிழகத்தின் பினாமி ஆட்சியாளர்கள் ஏற்படுத்த வேண்டும்”.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.