டெல்லி: தமிழ்நாட்டுக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில், தண்ணீர் திறந்து விட முடியாது காங்கிரஸ் காங்கிரஸ் மாநில அரசு மீண்டும் முரண்டு பிடித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தர கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது. இதுகுறித்து கூட்டணி கட்சியான திமுக அரசு, அம்மாநில அரசுடன் பேச தயங்கி வருவதுடன், மத்தியஅரசையும், நீதிமன்றத்தையும் நாடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி வலியுறுத்தி வருகிறது. அதன்படி, காவிரியில் இருந்து உரிய அளவிலான தண்ணீரை திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் கூடிய காவிரி நீர் ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு நவம்பர் 1 முதல் 23ஆம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதை ஏற்க முடியாது என கர்நாடக மாநில அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவரும், மாநில துணைமுதல்வருமான டி.கே.சிவகுமார், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் கே.ஆர்.எஸ், கபினி, அணைகளில் இருக்கும் தண்ணீர் எங்கள் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை, எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என மீண்டும் மறுத்துள்ளார்.