சென்னை:

மூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனது தொடர்பான காவல்துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  கடுமையாக போராடி வந்த சமூக ஆர்வலர் முகிலன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.  இவர், கடந்த பிப்ரவரி 15ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்துவிட்டு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான ஆதாரங்களை  வெளியிட்டுவிட்டு அன்று இரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்தவர், திடீரென காணாமல் போனார்.

அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ள முகிலன், அதன் பிறகு காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது/

இதற்கிடையில்,  மாயமான முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் கடந்த விசாரணை யின்போது, முகிலன் வடமாநிலம் ஒன்றில் இருப்பதாக  துப்பு கிடைத்துள்ளதாக உயர்நீதிமன்றத் தில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முகிலன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  சி.பி.சி.ஐ.டி தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. முகிலன் குறித்த தகவலை வெளியே தெரிவித்தால் விசாரணை பாதிக்கப்படும். சில உண்மைகளால் அவரது உயிருக்கு கூட ஆபத்துக்கள் ஏற்படலாம். அதனால் அவற்றை தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி  அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  முகிலன் காணாமல் போனது தொடர்பான காவல்துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாக  கருத்து தெரி வித்த நீதிமன்றம்,. வழக்கின் அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தது.