சென்னை: எந்தவித புகாரும் இன்றி மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என 2வது கட்ட மகளிர் உரிமை தொகை வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் எந்தவித புகாரும் இன்றி செயல்படுத்தப்படுகிறது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்,  என்னால் மக்களை சந்திக்காமல்  இருக்க முடியாது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்தேன். உங்களை பார்க்கும் போது உடல் வலி குறைந்து மகிழ்ச்சி மேலிடுகிறது. தொண்டை வலி இருந்தாலும் தொண்டு செய்வதில் தொய்வு இருக்க கூடாது என வந்தேன் என தெரிவித்தார்.

திமுக அரசு, கடந்த 2021ஆம் ஆண்டு தெரிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி,  மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழகத்தில் இருந்து முதற்கட்டமாக 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் உரிமை தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து விடுபட்டவர்கள், விரும்பும் பட்சத்தில்,  தகுதியுள்ள மகளிர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது அதன்படி,   பல லட்சக்கணக்கான மகளிர் மேல்முறையீடு செய்தனர். அவர்களில்,   7.35 லட்சம் மகளிர் , உரிமை தொகை திட்டத்தில் சேர தகுதியானவர்கள் என சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேல்முறையீடு செய்த பெண்களுக்கு  உரிமை தொகை வழங்கும் திட்டமானது இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில்  நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் 2ஆம் கட்டத்தை  தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் எண்ணிக்கையானது 1கோடியே 13 லட்சத்து 84 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை துவங்கி வைத்ததும்,  மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்.

வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படும் உரிமை தொகையானது, இந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.