சென்னை:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, தலைமறைவான நிலையில், இன்று திருப்பதி மலை அடிவாரத்தில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை தண்டையார் பேட்டையைச மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா. இந்தாண்டு நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றதன் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், அவர் நீட் தேர்வு எழுதாமல், அவருக்கு பதிலாக மும்பையில் வேறு ஒருவர் நீட் தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக, மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை நடத்தியதில், உதிர் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானார். அவரது முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாணவர் உதித்சூர்யா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய டிஜிபி, அவரை பிடிக்க தனிப்படையையும் அமைத்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில், மாணவர் உதித் சூர்யா குடும்பத்தோடு, திருப்பதி மலை அடிவாரத்தில் தங்கி யிருந்தபோது போலீசார் இன்று கைது செய்தனர். அவரை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்துள்ளனர்.
சென்னை எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆள் மாறாட்டம் செய்து எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்? ஆள்மாறாட்டம் செய்தவர்களில் யாரேனும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.