டில்லி

இந்திய வானிலை ஆய்வு மையம் கோவா, கடலோரக் கர்நாடகா மற்றும் ஒரிசா மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் கனமழை  பெய்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.  தற்போது அங்கு மழை குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.  கடந்த சில நாட்களாக கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “சத்திஸ்கர், கிழக்கு மத்திய பிரதேசம், மத்திய மகாராஷ்டிரா, மேற்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலுங்கானா, கர்நாடகாவின் வடக்கு உள்பகுதி மற்றும் கடலோரப்பகுதிகள், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.  ஒரு சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.

இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர், டில்லி, பீகார், உத்திரப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தான், ஜார்காண்ட், மேற்கு வங்க கங்கைக்கரை பகுதிகள், குஜராத் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அரபிக் கடலோரப் பகுதிகள், மேற்கு கடற்கரைப் பகுதிகள், மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலோரப்பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா கடற்கரைப்பகுதிகளில் சுமார் 40-50 கிமீ வேகத்தில் கனமான  காற்று வீசக் கூடும்.  இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.