சென்னை: ஐப்பசி ‘அடைமழை’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 10ம் தேதி சென்னையில் கனமழை பெய்யும் இந்திய வானிலை மையம்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நமது முன்னோர்கள் கூறிய பழமொழிகளான, ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; கார்த்திகை மாதம் கன மழை பெய்யும்  என்பதை  மெய்ப்பிக்கும் வகையில் நடப்பாண்டு தமிழகத்தில் வடகிழக்குபருவமழை பொழிந்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டி வருகிறது. சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டைய பேரழிவை நினைவுகூறும் வகையில் மழை பெய்து வருகிறது. இன்று  காலை வரையிலான நேரத்தில் 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதுடன், மக்களின் அன்றாடை பணிகளும் தடை பட்டடுள்ளது. இந்த நிலையில்,  தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள வானிலை அறிவிப்பில்,  நவம்பர் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகல், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு  சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு பேட்டியளித்த  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்யுஞ்ஜய் மஹாபாத்ரா, கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகியுள்ளது. இன்று தீவிரம் சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். வங்காள விரிகுடாவில் 9-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 11-ம் தேதி காலை வட தமிழக கடலோரப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று தெரிவித்தார்.

இதனால் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம், தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்த அவர், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி பயணிக்கும் போது வரும் மழையின் அளவு 12ம் தேதி குறையும். மீனவர்கள் 9ம் தேதிக்குள் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.