புதுக்கோட்டை: கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,  தடுப்பூசி போட்டுக்கொள்ள நான் தயார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்தில் 166 மையங்களில்  திடடமிட்டபடி கொரோனா தடுப்பூசி போடப்படும். அதற்கான  அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

முதல்கட்டமாக மத்தியஅரசு அறிவுறுத்தியபடி, முன்களப் பணியாளர்களான பிரபல மருத்துவர்கள் மருத்துவத் துறை உயரதிகாரிகள் ஆகியோர் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள உள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் குணமடைந்து 15 தினங்கள் ஆன முன்களப்பணியாளர்கள் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளலாம். முதற்கட்டமாக 6 லட்சம் சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது என்றார்.

தடுப்பூசி தொடர்பாக பல்வேறு முரண்பட்ட தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தவர், பொது மக்களுக்கு பயம் இருந்தால் நான் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.