ஈரோடு: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், நான் போட்டியிட வில்லை, ஆனால் எனது மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா எம்எல்ஏ மறைவை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அந்த தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதால், மீண்டும் அந்த தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு மீண்டும் ஒதுக்குவதாக திமுக அறிவித்துள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு யார் வேர்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது வயது முதிர்வு காரணமாக, அவர் தனது இளைய மகனுக்கு வாய்ப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் , நான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் இளைஞர் ஒருவருக்கு தான் காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் என் இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன். காங்கிரஸ் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.