காரைக்குடி

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் அதிகரிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  அவற்றில் ஒன்றாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  இந்நிலையில் சிவகங்கை மாவட்ட காரைக்குடி சட்ட மன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்த முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ”நாடு முழுவதும் துரதிருஷ்டவசமாக மதுப்பழக்கம் பரவி விட்டது.  அதற்குத் தமிழ்நாடு விதிவிலக்கு இல்லை   இதில். வயது வந்தவர்கள், இளைஞர்கள், மட்டுமின்றி ஒரு சில இடங்களில் பெண்கள் கூட மது அருந்துகின்றனர். எனக்கு மதுப்பழக்கம் இல்லை என்பதால் மது அருந்துபவர்களைத் தீயவர்கள் எனக் கூற முடியாது. எனவே மது அருந்தும் பழக்கம் இருக்கும் வரை மதுக்கடைகளை மூட முடியாது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகும்.   உலகெங்கும், என்ன நெறிமுறைகள் உள்ளது என்றால் மதுக்கடைகள் இருக்கும்,. ஆனால் மது அருந்தக் கூடாது எனப் பிரசாரம் செய்கின்றனர். கல்வி புகட்டுகின்றனர். குறிப்பாகப் புகை பிடிக்கக் கூடாது. புற்றுநோய் வரும் என பிரசாரம் செய்வதால் இப்பழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது.

இதைப் போல் தமிழக அரசு மது அருந்தக் கூடாது. உடல் நலன் கெடும் என பெரும் தொகையைச் செலவு செய்து பிரசாரம் செய்ய வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் கல்வி புகட்ட வேண்டும்.   இதை எதிர்க்கும் பாஜக ஆளும் மாநிலங்களில் முதலில் மதுக்கடைகளை மூடட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.