சென்னை:

ட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நீதிமன்றத்தில் ஆஜரான சன் குரூப் அதிபர் கலாநிதி மாறன் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது பதிலும் பதற்றமாகவே இருந்தது. இது அங்கிருந்த வழக்கறிஞர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு தொடர்பான வழக்கில் மாறன் சகோதரர் கள் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டு பதிவின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது கட்டாயம்.

இதை எதிர்த்து மாறன் சகோதரர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று விசாரணைக்கு ஆஜரான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மீதும் நீதிபதி குற்றச்சாட்டை பதிவு செய்தார்.

கூட்டுச் சதி, ஆவணங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து  கலாநிதி மாறனுக்கு எதிராக வரும் பிப்ரவரி 19ந் தேதி   முதல் சாட்சி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவின் போது நீதிமன்றத்தில் ஆஜரான கலாநிதி மாறன் பதட்டத்துடனேயே காணப்பட்டார். நீதிபதியிடம்,  தனக்கு எதிராக சதி நடைபெறுகிறது என்றும்,  சன் டிவியை அழிக்க முயற்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

தன்னையும், சன் டிவியையும் அழிக்கவே  இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும்  பதற்றத்துடன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார் கலாநிதி மாறன்.

தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டிகாத்து வரும் கலாநிதி மாறன், நீதிமன்றத்தில் பதற்றத்துடன் காணப்பட்டது, அங்கிருந்த வழக்கறி ஞர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.