தேனி: தேனி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான பார் நடத்தியதாக 19 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாவட்ட மான தேனி மாவட்டத்தில் அதிகம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட மதுபானக்கடைகள் கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், டாஸ்மாக் பார் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், அரசின் அனுமதியின்றி, பல இடங்களில் டாஸ்மாக் பார்கள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான குடிமகன்கள் அங்கு சென்று மது அருந்திச் செல்கின்றனர். இந்த நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, காவல்துறையினர் திடீரென மாவட்டத்தில் 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திவந்ததாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அதிமுகவினர் என்றும் கூறப்படுகிறது.
துணைமுதல்வரின் மாவட்டத்திலேயே மதுபான பார்கள் சட்டவிரோதமாக நடைபெற்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுபானம் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், அதற்கு முன்பாக டாஸ்மாக் பார்கள் திறக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.