மதுரை: அதிமுக ஆட்சியின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில், நாளை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
திமுக அரசின் மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றினார். அவர்மீது ஊழல் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், அவருக்கு திமுக தலைமை மின்சாரத்துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறது.
இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக பலர் அவர்மீது புகார் கொடுத்திருந்தனர். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது உதவியாளர்கள் மற்றும் சண்முகம், ராஜ்குமார், அசோக் குமார் என நான்குபேர் மீது ஒரு வழக்கும் , 37 பேர் மீது 2 வழக்கும் என மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்படிருந்தது.
இந்த வழக்கு சென்னையில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பண மோசடி புகார் கொடுத்தவர்களுக்கு, அமைச்சர் பணத்தை திரும்பி கொடுத்துவிட்டதால், வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சண்முகம், ராஜ்குமார், அசோக் குமார் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதுபோல ஒவ்வொருவரும் ஊழல் செய்துவிட்டு, பின்னர், ஊழல் பணத்தை திரும்பிகொடுத்துவிட்டேன் என்று கூறி வழக்கை ரத்து செய்ய சொன்னால், என்னவாகும், நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துவிடுமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இருப்பதால், புகார் கொடுத்தவர்களை மிரட்டி வழக்கை வாபஸ் பெற வைத்தாரா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வரும் 11ந்தேதி ஆஜராக வேண்டும், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
இன்று அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் திமுக அரசு ரெய்டு நடத்தி வரும் நிலையில், திமுக அமைச்சரை நாளை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.