சென்ன‍ை: விதிமுறைகள் வெளிப்படையாக இல்லாத காரணத்தால், கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேச தரவரிசைக் கணக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது ஐஐடி கூட்டுக்குழு.

இதுகுறித்து கூறப்படுவதாவது; சர்வதேச அளவில், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி தரத்தை நிர்ணயித்து, ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் தரவரிசை வழங்கும் நடவடிக்கையில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டைம்ஸ் என்ற கல்வி இதழ் நடத்தும், உயர் கல்வி கணக்கெடுப்பு மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘குவாகுவாக்ரெல்லி சைமண்ட்ஸ்’ நிறுவனம் நடத்தும் க்யூ.எஸ். சர்வதேச பல்கலை தரவரிசை ஆகியவை முக்கியமானது.

இந்த நிறுவனங்கள் வெளியிடும் பட்டியலில் இடம்பிடிக்க, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஆர்வம் காட்டுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு, டைம்ஸ் இதழின் சர்வதேச கணக்கெடுப்பில் பங்கேற்கப் போவது இல்லை என்று இந்தியாவில் உள்ள தேசிய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி -கள் முடிவு செய்துள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐஐடி கூட்டுக்குழு வெளியிட்டது. டைம்ஸ் கணக்கெடுப்பில் உள்ள விதிமுறைகளை வெளிப்படையாக அறிவித்தால், அடுத்த ஆண்டில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.