சென்னை: பேராசிரியர்கள் 3 பேரின் துன்புறுத்தலே தமது தற்கொலைக்கு காரணம் என்று ஐஐடி மாணவியின் செல்போன் ஆதாரம் பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். ஐஐடி மாணவி. சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார்.


கடந்த சனிக்கிழமை தமது விடுதி அறையில் பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குறைந்த மதிப்பெண் பெற்றதே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடைமைகளும் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகளும் முடிந்தன.


இந் நிலையில், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது அதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.தனது தற்கொலைக்கு ஐஐட உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் காரணம் என்று அந்த மாணவி ஆங்கிலத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.


மேலும் 2 பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த 3 பேரும் சேர்ந்து தன்னை துன்புறுத்தினர் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த செல்போன் பதிவுகள் மாணவி தற்கொலைக்கு முந்தைய நாளில் (நவ.8) பதிவு செய்யப்பட்டதாகும்.
எனவே, மாணவி தற்கொலை விவகாரத்தில் தொடர்புடைய ஐஐடி பேராசிரியர்களை சஸ்பெண்ட் நீக்கம் செய்ய வேண்டும், பேராசிரியர்களின் மத உணர்வுகளே மாணவியின் மரணத்துக்கு காரணம்.


எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் ஐஐடி முன்பு முற்றுகை போராட்டத்தில் இறங்கினர். அதனால் ஐஐடி நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செல்போன் மூலம் கிடைத்த ஆதாரங்களை மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் போலீசில் கொடுத்து இருக்கிறார். ஆனால், முறையான விசாரணை இல்லை என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.