சென்னை: அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து, ஐஐடி குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தியது.
கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை புளியந்தோப்பில் கே.பி.பார்க் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டு இருப்பதாக அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். குடியிருப்பின் படிக்கட்டு, சுவர் உள்பட பல பகுதிகளில் இடிந்து விழுவதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, அமைச்சர் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஐஐடி நிபுணர்கள் ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டது. அதையடுத்து, ஐஐடி நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னதாக இந்த புகார் தொடர்பாக, குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தவறு நடந்தது உறுதியானால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களின் ஆய்வறிக்கையை தொடர்ந்து, மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.