வெற்றியின் அளவுகோல் வருமான வரி-6, -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வெற்றியின் அளவுகோல் வருமான வரி!

6. எளிய, ஒரு பக்க வருமான வரி ரிடர்ன்.

‘என்னங்க இது… ? எது எடுத்தாலும் இங்கிலிஷ்லயே இருந்தா எப்படிங்க…?

தமிழ்ல அச்சடிக்கக் கூடாதா…?’

நியாயமான கேள்வி.

‘மணி ஆர்டர்’ படிவத்தை தமிழில் கொண்டு வருவதற்கே பல ஆண்டுகள் முட்டி மோத வேண்டி இருந்தது.

(நன்றி: திரு குமரி அனந்தன் அவர்கள்)

அதற்குப் பிறகு என்ன நடந்தது…? தமிழில் பேசுவதும் எழுதுவதும் ஏதோ அநாகரிகமான காரியம் போல நினைத்துக் கொண்டு, தமிழ்ப் படிவத்தைப் பயன்படுத்தாமலே விட்டு விட்டோம்.

வருமான வரிப் படிவத்துக்கும் அதே நிலை வரலாம். இருந்தாலும் ‘ரிடர்ன்’ தமிழில் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

வருமான வரி ‘ரிடர்ன்’ பொறுத்த மட்டில், மொழி ஒரு தடையாக இருக்கவே முடியாது. காரணம், இங்கே ‘எழுதுவதற்கு’ வாய்ப்புகள் மிகக் குறைவு. எல்லாமே ‘நிரப்புவது’தான்.

சில விவரங்களை, அவ்வந்தக் கட்டத்துக்குள் நிரப்பினால் போதும்.

ஒரு விடுமுறை விண்ணப்பம் (leave letter) அளவுக்குக் கூட, ‘ரிடர்ன் படிவத்தில்’ விரிவாக, வாக்கியங்களாக எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை.

ஒரு பக்க படிவம் ‘சஹஜ் 1’ நிரப்புவோமா…?

‘சரள்’ ‘சஹஜ்’ போன்ற சொற்கள் எல்லாம் இந்தியில் இருக்கின்றனவே என்று அச்சம் வேண்டாம்.

சரளமாக, சகஜமாக இருக்கும் என்பதைக் குறிக்கவே இப்பெயர்கள்.

‘சகஜ் 1’ படிவத்தில், தொடக்கத்திலேயே இப்படிவத்தை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெளிவாகத் தரப்பட்டுள்ளது, இதன்படி, சம்பள வருமானம், (வீட்டு) வாடகை வருமானம்,  (சேமிப்பு உள்ளிட்டவை மூலம்) பிற வகை வருமானம் கொண்ட தனி நபர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.

ஆனால் மொத்த ஆண்டு வருமானம் 50 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

அதற்கு மிஞ்சிப் போனால்..?

வேறு படிவம் இருக்கிறது. அதில்தான் தாக்கல் செய்ய முடியும்.

இப்போதைக்கு ‘சகஜ் 1’ படிவம் சொல்லும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட தனி நபர் என்று கொள்வோம்.

படிவத்தை நிரப்புவோம்.

வலது மூலையில், மதிப்பீட்டு ஆண்டு (assessment year) என்கிற கட்டத்தில் ‘2018 – 19’ எனக் குறிப்பிடுவோம்.

ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு இருந்தால் மீண்டும் ஒருமுறை எழுத வேண்டியதில்லை.

பகுதி ஏ – பொதுத் தகவல்கள்.

முதல் வரியில் மூன்று தகவல்கள் கேட்கப் படுகின்றன.

நிரந்தரக் கணக்கு எண்; (தனி நபரின்) பெயர்; ‘ஆதார்’ எண்.

இம்மூன்று கட்டங்களையும் மிகவும் கவனத்துடன் நிரப்புதல் அவசியம்.

‘பான்’ அட்டையில் உள்ளவாறே, சற்றும் வேறுபாடு இல்லாமல் எழுதுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சற்று மாறினாலும் படிவம் செல்லாததாகி விடும்.

இரண்டாவதாக, ‘மொபைல்’ எண்; மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி (postal address) ஆகியன.

அஞ்சல் முகவரியில் கதவிலக்கம் தொடங்கி தெரு, வட்டம், ஊர், மாவட்டம், மாநிலம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இடம் ஒதுக்கப் பட்டு இருக்கிறது. அது அதற்கான இடத்தில் எழுதலாம்.

அடுத்து, வசிப்பிட தகுதி (residential status). விரிவாக இது குறித்துப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் வசிப்பவர்தான் என்பதற்கான, ‘ரெசிடெண்ட்’ என்கிற கட்டத்தைத் தேர்வு செய்வோம்.

‘அரசு ஊழியரா, பொதுத்துறைப் பணியாளரா, ‘மற்றவரா’ என்கிற கேள்விக்கு அதற்கான கட்டத்தின் கீழ் ‘டிக்’ செய்யலாம்.

அடுத்த வரியில், பிரிவு 139 (1)இன் கீழ் குறிப்பிட்ட கெடு முடிவதற்குள்,  ‘ரிடர்ன்’ தாக்கல் செய்யப் படுகிறதா என்று கேட்கப் படுகிறது. ஆம் என்று கொள்வோம். அதற்கான கட்டத்தில் – ‘டிக்’

பிரிவு ஏ வில் உள்ள அடுத்த மூன்று வரிகளை அப்படியே விட்டு விடலாம். எதுவும் எழுதத் தேவை இல்லை.

இந்தப் பிரிவு இத்துடன் முடிந்து விடுகிறது.

பிரிவு – பி’. மொத்த வருமானம். (ரூபாயில் மட்டும். அதாவது, ‘பைசா’ கணக்கு தேவையில்லை.)

இந்தப் பிரிவில் நான்கே வரிகள்தாம் உள்ளன.

‘பி’ 1 – சம்பள வருமானம்;

‘பி’ 2 – வாடகை வருமானம்; “இழப்பு ஏற்பட்டு இருந்தால், கழித்தல் ‘ – ‘ குறியிட்டுக் காட்டலாம்)

‘பி’ 3 – பிற வகை வருமானம்.

‘பி’ 4 – இம்மூன்றையும் கூட்டி மொத்தத் தொகை.

பிரிவு – ‘சி’ – கழிவுகள்.

வருமான வரிச் சட்டப் பிரிவு 80இன் கீழ் கழிவு கோருவதாக இருந்தால், கழிவுத் தொகையைக் காட்டி, இதனை மொத்த வருமானத்தில் கழித்துப் போக மீதம் உள்ள தொகையை ‘வரிக்கு உட்பட்ட’ வருமானமாகக் காட்ட வேண்டும். கட்டங்கள் தனித்தனியே கொடுக்கப் பட்டுள்ளன.

மொத்த வரி வருமானம் (‘சி’ 2) கட்டம்தான், வரி கணக்கீட்டுக்கான வருமானம். இதன் மீதுதான் வருமான வரி செலுத்த வேண்டும்.

பிரிவு ‘டி’ – வட்டி மற்றும் தள்ளுபடி.

ஒரு வேளை ‘ரிடர்ன்’ குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை எனில், வருமானவரியின் மீது வட்டி சேர்த்துக் கட்ட வேண்டி வரும். அதே போல், சட்டப் பிரிவு 87, 89ன் கீழ், வருமான வரியில் இருந்து தள்ளுபடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு வட்டி, தள்ளுபடி இரண்டுமே இல்லை என்று (உதாரணத்துக்கு) கொள்வோம். ஆகவே ‘பிரிவு ‘டி’ பகுதியில் நிரப்புவதற்கு எதுவும் இல்லை.

பிரிவு – ‘ஈ’.

நம்முடைய வங்கிக் கணக்குகள் தொடர்பான IFS code, வங்கிக் கிளையின் பெயர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் இப்பிரிவில் அடங்கும். ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். வருமான வரி தொடர்பாக அன்றி வேறு எதற்கும், வங்கி விவரங்கள் பயன்படுத்தப்பட மாட்டா.

இனி.., வரித்தொகை எவ்வளவு… அதை நாம் எப்படி எப்போது செலுத்தினால் என்பதைக் குறிப்பிட்டால் போதும். இதற்காக இரண்டு அட்டவணைகள் (schedules) தரப்பட்டுள்ளன.

முதலாவது, முன்வரி (advance tax), சுய மதிப்பீட்டு வரி (self assessment tax) பற்றியது. என்றென்றைக்கு எந்தெந்த வங்கியில் வரி செலுத்தினோம் என்று எழுத வேண்டும்.

வரி செலுத்தியதற்கான வங்கி ரசீதில் இவ்விவரங்கள் இருக்கும்.

இரண்டாவது, வரி பிடித்தம் (TDS) பற்றியது. யார் பணம் பிடித்தம் செய்தார், அவருக்கான ‘TAN’, பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஆகிய விவரங்கள். இவை அனைத்தும், படிவம் 16ல் தெளிவாக இருக்கும்.

அதைப் பார்த்து அப்படியே எழுதினால் போது மானது. (படிவம் 16 பற்றி முந்தைய அத்தியா யங்களில் பார்க்கவும்)

நிறைவாக, ‘இப்படிவத்தில் சொன்னதெல்லம், நினைவறிந்தவரை உண்மைதான்’ என்கிற உறுதிமொழியில் கையொப்பம் இட வேண்டும். அவ்வளவுதான். படிவம் நிரப்பி ஆயிற்று.

வருமான வரி அலுவலகத்தில் சமர்ப்பித்தால், அதைப் பெற்றுக் கொள்பவர், படிவத்தில், அதற்கான இடத்தில் கையொப்பம், அலுவலக முத்திரை இட்டு ஒரு நகலை (copy) நம்மிடம் தருவார். இதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வருமான வரிப் படிவம் தாக்கல் செய்கிற, சட்டப்படியான மிக முக்கியமான கடமை ஆற்றி விட்டோம். மன அமைதியுடன் நம்முடைய தொழிலை கவனிக்கலாம்.

அடிப்படையில் இவ்வளவுதான். இனி, சற்றே ஆழமாகச் செல்வோமா…?

(வளரும்)                                                   – பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

Tags: -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, Iincome tax series-6, written by auditor Baskaran krishnamoorthy, வெற்றியின் அளவுகோல் வருமான வரி-6