நெல்லை: பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில், காலி பிளாஸ்டிக் பாட்டில்களை திருப்பி அளித்தால் ரூ.1 தரப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையர் அசத்தல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சோதனை முயற்சியாக நெல்லை டவுன் பகுதிகளில் மட்டும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து பணம் பெறலாம் என ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே சில வழிகாட்டல்களும், வட்டார அளவில் தடைகள் இருந்தாலும் மாநில அளவில் தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 14 வகையான நெகிழிப் பொருட்கள் மீதான தடையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது. ஆனால், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மெத்தனத்தால், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடும், உற்பத்தியும் குறைந்தபாடில்லை. ஊட்டி போன்ற மலைவாசஸ்தலங்களில், நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மற்ற பகுதிகளில் எப்போதும் போலவே பிளாஸ்டிக் பொருட்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்கிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், நெகிழி இல்லா மாநகராட்சியை உருவாக்க ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதன் தொடர்சியாக நெல்லை மாநகராட்சியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி, பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் முதல் முறையாக தச்சநல்லூர் மண்டலத்தில் காலி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலைக் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் இன்று (மார்ச் 23) தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி டவுன் சுகாதார அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் வழங்கும் திட்டத்தை சுகாதார ஆய்வாளர் இளங்கோ தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்தத் திட்டத்தை நெல்லை மாநகராட்சி பகுதிகளில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் முதல் நாளிலேயே பொதுமக்கள் ஆர்வம் உடன் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து 1 ரூபாய் பெற்றுச் சென்றனர். இதன் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்து பிளாஸ்டிக் ஒழியும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.