சென்னை:
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் எந்த பலனும் கிடைக்காது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதிப்பங்கீடுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே திமுக அணியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்ட நிலையில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி போன்ற சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தேமுதிகவிடமும் திரை மறைவு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
அதுபோல, அதிமுக அணியில் பாஜக, பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்ட நிலையில், உதிரிக்கட்சிகளான தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே கட்சிகளுடன் அதிமுக பேசி வந்தது. இதில், த.மா.காவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், புதிய தமிழகம் மற்றும் ஐஜேகே கட்சிகள் முரண்டு பிடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல தேமுதிகவின் நிபந்தனைகளையும் ஏற்க அதிமுக மறுத்து உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் 3வது அணி ஒன்று அமையும் சூழலும் உருவாகி வருகிறது.
டிடிவி தினகரனின் தலைமையில் 3வது அணி அமைய திரைமறைவு முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த அணியில், மக்கள் நீதி மய்யம், ஐஜேகே போன்ற கட்சிகள் சேரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தேமுதிகவையும் இழுக்க முயற்கிகள் நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வருகின்றன.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் தமிழகத்தற்கும், தமிழக மக்களுக்கும் எந்த பலனும் கிடைக்காது என்றவர்…. இது தமிழக மக்களுக்கும் தெரியும் என்றார்.
நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் சக்தி தமிழக மக்கள் கையில்தான் உள்ளது என்றவர், ஜெயலலிதாவை அவமதித்த எந்த கட்சியுடனும் அமமுக கூட்டணி வைக்காது என்றும் கூறினார்.
மேலும், சசிகலா கேட்டுக்கொண்டதால்தான் மற்ற எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஓபிஎஸ் மீண்டும் முதல்வராகியிருந்தார் என்றும், ஆனால், ஓபிஎஸ், தமிழகத்தில் அதிமுகவை பாஜக கிளையாக மாற்றும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியும், தமிழக முதல்வர் பதவியும் ஒருவரிடம்தான் இருக்க வேண்டும் என்பதே ஜெயலலிதா இருந்தபோது கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.