சென்னை:
ரேஷன் கார்டுகளுக்கு பதில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் நிலவி வந்த போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் விதத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவரது மறைவு காரணமாக சில காலம் தடைபட்டு வந்த ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம், பின்னர் கடந்த ஆண்டு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றிருந்த வீட்டு உரிமையாளரின் புகைப்படத்துக்கு பதிலாக நடிகைகள் புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற தவறுகள் நீக்கப்பட்டு புதிய அட்டடைகள் வழங்கப்பட்டு வந்தன.
அதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்துடன் பழைய ரேஷன் கார்டுகளின் ஆயுட்காலம் முடிவடைவதாகவும், மார்ச் 1ந்தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில், ஸ்மார்டு கார்டு இல்லை என்றால் நாளை முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பொதுவிநியோகத்துறை, அனைத்து மாவட்ட நுகர்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.