காஞ்சிபுரம்:

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைந்ததை  அடுத்து விரைவில் இளைய மடாதிபதி விஜயேந்திரர்  மடாதிபதியாக பட்டம் சூட இருக்கிறார். இந்த நிலையில், புதிய இளைய மடாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது?

இது குறித்து சங்கரமட பக்தர்கள் தெரிவிப்பதாவது:

பொதுவாக மடாதிபதி மறைந்தபிறகு, இளையமடாதிபதி பட்டத்துக்கு வருவார். அதாவது மடாதிபதி ஆகிவிடுவார். ஆகவே புதிதாக இளைய மடாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கும்.

இது போலத்தான் ஜெயேந்திரர்  கண்டெடுக்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் இருள்நீக்கி என்ற கிராமத்தில் 18 சூலை 1935 அன்று, சுப்ரமணியம் மகாதேவன் என்ற இயற்பெயரைக் கொண்டு பிறந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி ஆவார். இவர், தனது 19 வது வயதில், 22 மார்ச் 1954 அன்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கண்டெடுக்கப்பட்டு  பொறுப்பேற்றார்.

அதே போல, சங்கரநாராயணன் எனும் இயற்பெயராக கொண்ட,  தமிழ்நாட்டின் வடகிழக்கு மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள “தண்டலம்” எனும் கிராமத்தில், 1969 ஆம் ஆண்டு, மார்ச் 13 இல் பிறந்தவர் விஜயேந்திர சஸ்வரதி. இவர் தனது 13ம் வயதில் , 1983 ஆம் ஆண்டு மே 29 இல் தனது 14 ஆவது வயதில் பால பெரியவராக கண்டெடுக்கப்பட்டார்.

மூத்தவரான காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மறைந்தபிறகு, ஜெயேந்திரர் பீடாதிபதியானார். விஜயேந்திரர்  இளைய பீடாதிபதியானார்.

தற்போது ஜெயேந்திரர் மறைந்துவிட்ட நிலையில், பால பெரியவரை தேடும் பணி விரைவில் துவங்கும்.

பீடாதிபதியாக இருப்பவர் மனதில் ஞானதிருஷ்டியாக, பால பெரியவர் எங்கே பிறந்திருக்கிறார், வளர்ந்துவருகிறார் என்பது தோன்றும். அதோடு இது குறித்து ஜோதிடமும் பார்க்கப்படும்.

பாலபெரியவர் என்பவர், ஐயர் குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாகும். மற்றபடி மொழி ஒரு பொருட்டல்ல.

அவரை கண்டடைந்த பிறகு, அவரது பெற்ரோரிடம் அனுமதி கோரப்படும். அவர்கள் அனுமதி அளித்த பிறகு முறைப்படி அவருக்கு ஞானதீட்சை அளிக்கப்பட்டு, மடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்.

அதன் பிறகு அவர் குடும்ப உறவைத் துறந்துவிட வேண்டும். முழுமையாக மடத்துக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று சங்கர மட பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.