கனகராஜ்

கோவை:

ரு தொழிலாளர்கள் பலியான  கல் குவாரியை மூடவில்லை என்றால் தான் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிடுவதாக சசிகலா தரப்பு எம்.எல்.ஏ. ஒருவர் முதல்வர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே பெரியகுயிலி பகுதியில் உள்ள கல்குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் பலியாகிவிட்டார்கள்.  இந்த விவகாரத்தில் கல்குவாரி மீது, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் அந்த கல்குவாரியை தொகுத எம்எல்ஏ கனகராஜ் ஆய்வு செய்தார். இவர் அ.தி.மு.க. சசிகலா அணியில் இருப்பவர்.

ஆய்வை முடித்த கனகராஜ், “இந்த கல் குவாரியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இரு தொழிலாளிகள் பலியாகி உள்ளனர். மேலும், கணக்கு வழக்குகளில் செய்யப்பட்டுள்ள முறைகேடுகளால் அரசுக்கு ரூ.50 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும், அமைச்சர்களிடம் வலியுறுத்துவேன். எனது கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை எனில் எடப்பாடி அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு சென்றுவிடுவேன்” என்றார்.

மேலும், “மக்களுக்கு பணியாற்றவே எம்எல்ஏ.வாக இருக்கிறேன். . அதை செய்ய முடியவில்லை எனில் என்றால் பதவியை ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டேன்” என்றார்.

அரசியல் வட்டாரத்தில், “எம்.எல்.ஏ. கனகராஜ், ராஜினாமா செய்வார் என்று தோன்றவில்லை. அதே நேரம் கல் குவாரி விவகாரம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ அவர் ஓ.பி.எஸ். பக்கம் அணி மாறலாம்.

முதல்வர் எடப்பாடி அணியிலிருந்து இன்னும் ஆறு எம்.எ.ல்.ஏ.க்கள் அணி மாறினால் ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆகவே எம்.எல்.ஏ. கனராஜின் அறிவிப்பால் சசிகலா – எடப்பாடி தரப்புக்கு கடும் அதிரச்சி ஏற்பட்டிருக்கும்” என்று பேசப்படுகிறது.