டில்லி

ருமல்  இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால் காசநோய் பரிசோதனை அவசியம் செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசு சார்பில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நேற்றி தற்போதைய சூழலுக்குப் பொருந்தும் வகையிலான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில்

”கொரோனா நோயாளிகள் சிலர் இருமலாலும் பாதிக்கப்படுகின்றனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்படாதவர் யாராக இருந்தாலும் 2- 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடிக்குமேயானால், அவர்களுக்கு காசநோய் பரிசோதனைக்குப் பரிந்துரைக்க வேண்டியது அவசியம்.  கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஹெச்ஆர்சிடி பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். செயற்கைஆக்சிஜன் சுவாசம் தேவைப்படாத கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு ஊசியைச் செலுத்துவது எந்தப் பலனும் அளிப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு மிதமாக உள்ளவர்களுக்குக் காய்ச்சல், வலி நிவாரணி மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம்.   கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக உள்ளவர்களுக்கு மட்டுமே சி.டி. ஸ்கேன் அல்லது விலை உயர்ந்த ரத்தப் பரிசோதனைகளை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். அத்துடன் மிதமான தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு மெத்தில்ப்ரீட்னி சோலோன்ஊசியை 0.5 மி.கி. அளவுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

எத்தகைய கொரோனா நோயாளிகளுக்கும் ஐவர்மெஸ்டின், ஃபாவிபிரவிர், டாக்சிசைக்லின் ஆகிய மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்.  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 10 நாட்களுக்கு மேலாகியும் பாதிப்பு குறையாதவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்தினை கொடுக்கலாம்.” 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.