டில்லி

மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தற்போது பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரசின் மரபணு மாறிய ஒமிக்ரான் மிக வேகமாகப் பரவி வருகிறது.  இந்த வைரசின் தீவிர தாக்கம் பிப்ரவரி 2வது வாரத்தில் இருக்கக் கூடுமென மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.  கடந்த 2 வாரங்களில் இந்தியாவில் 1200 சதவீதத்துக்கு மேல் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

ஆயினும் பல மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைவாக நடத்தப்படுவதாக மத்திய  அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளதால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேர் தொற்றால் பாதித்துள்ளனர். மேலும்,  310 பேர் பலியாகி உள்ளனர்.

இதையொட்டி  மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

“உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரான் வைரஸ் மிகவும் தீவிரமானது என்று தெரிவித்துள்ளது.  ஆயினும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (ஐசிஎம்ஆர்) இணைய தளத்தில் உள்ள தரவுகளின் மூலம், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதி ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆலோசனைகளில், தொற்று பாதித்தவர்களை விரைந்து கண்டறிந்து தனிமைப்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் மூலமே தொற்றின் தீவிர தாக்கம் உள்ள பகுதி, புதிதாகத் தொற்று பரவும் பகுதிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை, புதிய கட்டுப்பாட்டு பகுதி அறிவித்தல், பரவுதலை அடையாளம் காணுதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த முடியும்.

இவற்றின் மூலம், மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கொரோனா பரவலைத் தடுக்கலாம்.  தவிர் இறப்பு, மக்கள் நோயினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.  ஆகவே, தொற்றுநோய் பரவுவதைத் திறம்படக் கண்காணிக்கவும், உடனடியாக மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை தொடங்கப்படுவதையும் உறுதி செய்ய கொரோனா பரிசோதனையை மேம்படுத்துவது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கடமையாகும்”.

எனக் கூறப்பட்டுள்ளது.