சென்னை: சென்னையில் காற்றாடி விட மாஞ்சா நூல் பயன்படுத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி, காற்றாடி பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் பல முறை எச்சரித்து, உத்தரவுகளையும் பிறப்பித்து இருக்கிறது.
இந் நிலையில் சென்னையில், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கோபால் குமாரின் 3 வயது மகன் அபிநவ் ஷராப் என்ற சிறுவன் மாஞ்சா நூலால் பலியானான்.
தமது மனைவி மற்றும் குழந்தை அபிநவ்வுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, மாஞ்சா நூல் அறுத்தது. மருத்துவமனை கொண்டும் செல்லும் வழியில் அந்த சிறுவன் உயிரிழந்தான்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், 10ம் வகுப்பு மாணவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் மாஞ்சாநூலை விற்றது யார், தயாரித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறி இருப்பதாவது: தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் யாரேனும் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாஞ்சா நூல் கொண்டு, பட்டம் விடுபவர்கள், அந்த நூலை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் . ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்கப்படுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.