டெல்லி: ஓய்வுபெற்ற காவல்அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக காதர் பாட்ஷாவின் என்ற போலீஸ்காரர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2008ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் தோண்டும் பணியின்போது 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்ததாகவும், அதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் 6 கோடி ரூபாய்க்கு சிலைகளை விற்றதாக குற்றாச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சிலைகளை விற்ற காவல் ஆய்வாளராக இருந்த காதர்பாட்ஷா டி.எஸ்.பி யாகவும், ஏட்டு-வாக இருந்த சுப்புராஜ் ஆய்வாளரகாவும் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை கோரி யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழ்க்கை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தரவுபடி விசாரணை மேற்கொண்ட ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், டிஎஸ்பி காதர் பாட்சா, சுப்புராஜ் உள்ளிட்டோர் மீது 2017ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. அதற்கு பின்னர் டிஎஸ்பி காதர் பாட்சா சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் தலைமறைவானார் காதர் பாட்சா, அவரை கைது செய்ய போலீசார் அவரை தேடி வந்தனர். அவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப் படையினர் கும்பகோணத்தில் அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட காதர் பாட்சா, ஜாமினில் வெளியில் வந்தார். இதைத்தொடர்ந்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி டிஎஸ்பி காதர்பாட்சா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 9 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், சாட்சியங்களின் வாக்குமூலங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் தன் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, சிலை கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.காதர் பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
இதற்கிடையில், சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் போலீஸ் துணை சூப்பிரண்டு காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தான் கைது செய்யப்பட்டதாக கூறி ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜாமின் மனு மீதான காணொலி காட்சி மூலம் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே தன்னை கைது செய்தனர். எனவே இந்த கைது சட்ட விரோதம், மேலும் நீதிமன்ற நடைமுறை சென்று கொண்டிருக்கும்போது கைது செய்தது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு பிப்ரவரி 13ந்தேதி (2025) விசாரித்தது. பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி.முத்துக்குமார், இந்த விவகாரத்தில் மனுதாரர் கைது செய்யப்பட்டாலும், சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித வாய்மொழி கருத்தையும் தெரிவிக்கவில்லை என வாதிட்டார்.
தொடர்ந்த காதர் பாட்ஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துர்கா தேவி, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க தொடங்கி இருப்பதாலும், சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம் பெற்றிருப்பதாலும், மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து விசாரிக்க வலியுறுத்தவில்லை என தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் கைதுக்கு எதிராக காதர் பாட்ஷாவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, காதர் பாட்ஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த நிலையில், பொன்மானிக்க வேலுக்கு எதிரான அரசின் ஆவனங்களை ஏற்று,. நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி தற்போது பொன்மானிக்க வேலை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.