சென்னை: அரசியல் கட்சி தலைவராக மாறி உள்ள நடிகர் விஜய்க்கு , ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

Y பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது, சமூக விரோதிகள் மற்றும் ஒருசிலரால் தாக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு ஆகும். இதில், எட்டு முதல் பதினொரு பணியாளர்கள் உள்ளனர், இதில் இரண்டு கமாண்டோக்கள் உள்ளனர். இவர்களில், ஐந்து உறுப்பினர்கள் – ஒரு தளபதி மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் – பாதுகாவலர் இல்லத்திற்கு நியமிக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் மூன்று ஆயுதமேந்திய தனிநபர் பாதுகாப்பு அதிகாரிகள் (PSOs) மூன்று ஷிப்டுகளில் சுழற்சி அடிப்படையில் தனிநபரோடு வருகிறார்கள். இந்த அளவிலான பாதுகாப்பு பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள பல VIP களுக்கு வழங்கப்படுகிறது, இது பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அதுபோல தற்போது தவெக தலைவர் விஜய்க்கும் வழங்கப்பட்டு உள்ளது.

2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம் என்ற  உறுமொழியுடன் அரசியலுக்கு வந்துள்ள  நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம்  ஓராண்டை கடந்த 2வது ஆண்டில்  அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து 2026 தேர்தல் பணிக்காக பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதைத்தொடர்ந்து, இப்போதே தேர்தலுக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து  பிரமாண்டமாகவும், மக்கள் நலத் திட்ட உதவிகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

விஜயின் அதிரடி நடவடிக்கை ஆளும் திமுக உள்பட மற்ற அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்  விஜய் மேற்கொள்ள போகும் பயணங்களின்போது, அவருக்கு எதிராக மக்கள் போராடங்களையும், அழுகிய தக்காளி,  முட்டை போன்வற்றால் தாக்க  வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு கருதி   விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில்,  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ‘Y’ பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.