பெங்களூரு

கர்நாடக முதல்வர் சித்தராமலிங்கையா ராகுல் காந்தியின் பாதயாத்திரை பாஜகவைக் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் உள்ள தவுபாலில் இருந்து கடந்த 14 ஆம் தேதி யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, அடுத்ததாக நாகாலாந்து சென்றார். தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடக முதல்வர் சித்தராமலிங்கையா இது குறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில்,

“ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் கிடைத்த அமோக வரவேற்பு பா.ஜ.க.வை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே போன்ற வரவேற்பு அசாம் மாநிலத்திலும் கிடைக்கும் என்பதை அறிந்து, அம்மாநில அரசு ஜனநாயகத்திற்கு எதிரான வகையில் செயல்பட்டுள்ளது. 

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, ராகுல் காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த அச்சத்தின் மூலம் அசாமில் நடைபெறும் ஊழல் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு உண்மை என்பது உறுதியாகியுள்ளது. ஆயினும் ராகுல் காந்தி தனது நிலைகுலையாத அர்ப்பணிப்புடன், நீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சியைத் தொடர்ந்து வருகிறார்.” 

என்று பதிவிட்டுள்ளார்.