உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கும் மூன்றாவது அணி ஆஸ்திரேலியா.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை ஒற்றைக்காலில் நின்று வெற்றிபெறச் செய்த கிளென் மேக்ஸ்வெல் அணியின் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தார்.

8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் 5வது விக்கெட்டுக்கு லபுஸ்சாக்னே உடன் ஜோடி சேர்ந்தார் மேக்ஸ்வெல்.

அணியின் ஸ்கோரை உயர்த்த மேக்ஸ்வெல் போராடிக்கொண்டிருக்க மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்துகொண்டிருந்தது.

18.3 ஓவரில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த நிலையில் மேக்ஸ்வெல்-லுக்கு பக்கபலமாக களமிறங்கினார் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்.

தனது விக்கெட்டை இழந்துவிடாமல் பார்த்துக்கொண்ட கம்மின்ஸ் மறுமுனையில் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து வந்த மேக்ஸ்வெல் அதிக பந்துகளை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதன்மூலம் 46.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்து ஆப்கன் நிர்ணயித்த 292 ரன் இலக்கை கடந்து அபார வெற்றிபெற்றது.

128 பந்துகளில் மேக்ஸ்வெல் அடித்த 201 ரன்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்றாலும் அது எளிதில் கிடைத்துவிடவில்லை என்பது போட்டியை பார்த்த அனைவரும் அறிந்தது.

மேக்ஸ்வெல் எடுத்த முதல் 100 ரன்களை விட அடுத்த 100 ரன்கள் எடுக்க உடலளவில் மிகவும் சிரமப்பட்டார்.

தசைப்பிடிப்பு மற்றும் முதுகுவலியால் அவதிப்பட்ட மேக்ஸ்வெல்லுக்கு இரண்டு முறை மைதானத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஓடக்கூட முடியாமல் மைதானத்தில் கீழே விழுந்த மேக்ஸ்வெல்லை ஸ்ட்ரெச்சரில் தான் தூக்கிச் செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்ட போதும் சிகிச்சைக்குப் பின் வலியை பொருட்படுத்தாமல் களத்தில் நின்று பந்துகளை பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் எல்லைக்கோட்டுக்கு அப்பால் அனுப்பினார்.

உலகக்கோப்பை ஒருநாள் சர்வதேச போட்டியில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது வீரர் மட்டுமன்றி ஓப்பனிங் பேட்ஸ்மெனாக இல்லாத ஒருவர் இரட்டை சதம் அடித்தது இதுவே முதல் முறை என்ற பெருமையையும் பெற்றார்.

கடும் உடல்வலியையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்ற மேக்ஸ்வெல் ஒரு கட்டத்தில் பை-ரன்னர் உதவியில்லாமல் விளையாட முடியாது என்ற நிலை ஏற்பட்டது இருந்தபோதும் ஏன் பை-ரன்னர் வைத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.

ஸ்பைடர் கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்ட ஐசிசி, மைதானத்தில் தடைகள் ஏற்படாமல் இருக்க 2011 ம் ஆண்டு அக்டோபர் முதல் பை-ரன்னர் வசதியை நீக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐசிசி-யின் இந்த விதி மாற்றம் காரணமாகவே பை-ரன்னர் கூட வைக்க முடியாமல் மிகுந்த சிரமத்துடன் விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெறச் செய்துள்ளார் கிளென் மேக்ஸ்வெல் என்பது குறிப்பிடத்தக்கது.