சென்னை:
ஏஎஸ் தேர்வு எழுதுபவரின் வயது வரம்பு குறைக்க பரிந்துரை செய்த குழுவின் பரிந்துரையை ஏற்கக்கூடாது என பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இன்று  வெளியிட்டுள்ள  அறிக்கை:

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி உள்ளிட்ட 24 வகை பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்து எடுப்பதற்கா ன  குடிமைப் பணிகள் தேர்வில் பங்கேற்பதற் கான அதிகபட்ச வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யத்திற்கு உயர்நிலைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. இது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் தீய செயலுக்கு ஒப்பானது ஆகும்.
இந்திய குடிமைப்பணி இந்த தேர்வு முறையில் சீர்திருத்தங்களைச் செய்வது குறித்து பரிந்துரை செய்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளரும், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான பி.எஸ். பாஸ்வான் தலைமையில் உயர்மட்டக் குழுமை மத்திய பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தது.ஓராண்டு ஆய்வுக்குப்பின் அக்குழு கடந்த வாரம் அதன் அறிக்கையை தேர்வாணையத்திடம் தாக்கல் செய்தது. அதில் குடிமைப்பணித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பை குறைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
குடிமைப்பணித் தேர்வுக்கான வயது வரம்பை குறைப்பது எந்த வகையிலும் நியாயமான செயலாக இருக்காது. தற்போது பொதுப்பிரிவினர் 32 வயது வரை இத்தேர்வில் பங்கேற்கலாம். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 வயது வரையிலும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்கள் 37 வயது வரையிலும் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதலாம்.
ias-exam
இதுபோதுமானதல்ல என்பதால் அதிகபட்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 35 வயதாகவும், மற்றவர்களுக்கு 40 வயதாகவும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துத் தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நியாயமான கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக, அதற்கு முற்றிலும் எதிரான பரிந்துரையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பரிசீலித்து வருவது முறையல்ல. இது கிராமப்புற, ஏழை மாணவர்களை மிகக் கடுமையாக பாதிக்கும்.
குடிமைப்பணித் தேர்வை பொதுப்பிரிவினர் 6 முறையும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 9 முறையும், எழுதலாம். மற்றவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வுகளில் பங்கேற்கலாம். கடந்த காலங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் உடனடியாக இத்தேர்வுகளில் பங்கேற்றனர்.
ஒருவகையில் கிடைக்கும் வாய்ப்பை, இன்னொரு வகையில் தட்டிப் பறிப்பது இயற்கை நீதிக்கு எதிரான செயலாகவே அமையும்.அதிகபட்ச வயது 32ஆக இருக்கும் போதே, தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில், வயது வரம்பு குறைக்கப்பட்டால் இன்னும் அதிகமான வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும். ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பல முயற்சிகளுக்குப் பிறகு தான் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் நிலைக்கு வருகின்றனர்.
சமூக நீதிக்கு இதைவிட மோசமான கொடுமையை இழைக்க முடியாது. இப்படி ஒரு நிலை ஏற்படுவதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும்.இப்போதும் பாஸ்வான் குழு பரிந்துரைப்படி அதிகபட்ச வயதை குறைப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, பாஸ்வான் குழு பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு குடிமைப் பணித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயதை இப்போதுள்ள 32 வயதிலிருந்து 35 வயதாக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.