சென்னை
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர்.

மாநிலம் எங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33.059 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 16.64 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கபட்டுணர். இதில் 18,369 பேர் உயிர் இழந்து 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி தற்போது சுமார் 2.43 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள், தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றுக்காகத் தமிழக முதல்வர் பொதுமக்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் நிதி உதவி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதையொட்டி திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர், சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் எனப் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
அவ்வகையில் தமிழக ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கம் அனைத்து ஐ ஏ எஸ் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நிவாரண பணிகளுக்காக அளிக்க முன்வந்துள்ளது. இந்த ஒரு நாள் ஊதியத்தை அவரவர் மே அல்லது ஜூன் மாதம் ஊதியத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்து அரசுக்கு அளிக்க வேண்டும் என கருவூல அதிகாரிகளுக்குச் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.