டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பரவல் 3 லட்சத்துக்கு கீழே வந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி,  நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் 4529 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நேற்று ( 2021, மே 18) மட்டும் நாட்டில் மொத்தம் 2,63,533 பேருக்கு கோவிட் -19 ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக 3 லட்சத்திற்கும் குறைவான பாதிப்பை இந்தியா பதிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,

இறப்பு விகிதத்தில் குறைவு ஏற்படவில்லை. நாள்தோறும் கோவிட்டுக்கு பலியாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4529 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும், 3,89,851 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,19,86,363 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 32,26,719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இந்தியா  முழுவதும்,18,58,09,302 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.