சென்னை

கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் இந்த வேளையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தலாம் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு கட்டுக் கடங்காமல் போய்க் கொண்டு இருக்கிறது.  அகில இந்திய அளவில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது.  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33.059 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 16.64 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கபட்டுணர்.  இதில் 18,369 பேர் உயிர் இழந்து 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி தற்போது சுமார் 2.43 லடம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது.  ஆயினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதற்கான ஒரே நடவடிக்கை கொரோனா தடுப்பூசி என்பதால் தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரமாக்கி உள்ளது. மத்திய அரசு 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளது.  ஆனால் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

இதனால் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசி வழங்காமல் உள்ளது.  இந்நிலையில் பாஜக பிரமுகரும் பிரபல நடிகையுமான குஷ்பு டிவிட்டரில், “அரசு கொரோனா தடுப்பூசி போடுவதை ரேஷன் அட்டையுடன் இணைக்க வேண்டும்.  மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் அளிக்கப்பட வேண்டும்.

தடுப்பூசி போடாதவர்களுக்கு அவர்கள் ஊசி போட்டுக் கொள்ளும் வரை ரேஷன் பொருட்கள் அளிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.  இதன் மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தகுதி உள்ளவர்களில் ஒரு சிலராவது முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.   மாநிலத்தில் போதுமான அளவு தடுப்பூசி மருந்துகள் இல்லாத நிலையில் குஷ்பு இவ்வாறு தெரிவித்தது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.