சென்னை: இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வரானதும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுபோல,  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில், தமிழறிஞர் மூவருக்கு, ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்படும் என கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். ஏற்கனவே  இயல், இசை, நாடகத்தில் சிறந்த விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ் நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இலக்கிய மாமணி என்ற பெயரில் விருது அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  இலக்கிய மாமணி’ விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், குழுவின் தலைவராக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டு உள்ளார்.  உறுப்பினர் செயலராக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

‘இலக்கிய மாமணி’ விருதுடன் தலா ரூ.5 லட்சம், பாராட்டு சான்றிதழ்  மற்றும் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.