சென்னை
சென்னை அருகே உள்ள சோழவரத்தில் உள்ள பழைய விமான ஓடுதளத்தை விமானப்படை கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட உள்ளது.
சென்னை அருகே உள்ள சோழவரத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்டுள்ள விமான ஓடுதளம் உள்ளது. இது இரண்டாம் உலகப்போரின் போது சென்னைக்கு அபாயம் உள்ளதாக தகவல் வந்ததால் அமைக்கப்பட்டது.
போரின் முடிவுக்கு பிறகு இங்கு ஒரு அதிகாரி மட்டும் இருந்து வந்தார். கடந்த 1950க்கு பிறகு அவரும் நீக்கப்பட்டு இந்த இடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இந்த இடத்தில் சுமார் 200 ஏக்கர் அளவுக்கு சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
சீனா கிழக்கு கடற்கரைப்பகுதியில் உள்ள இலங்கை, மியான்மர் மற்றும் மாலத்தீவுகளில் தனது ஆதிக்கத்தை தொடங்கி உள்ளது. இதனால் தென் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசாவுக்கு அபாயம் நேரிடலாம் என இந்திய விமானப்படை கருதுகிறது.
தமிழ்நாட்டில் பல தனியார் மற்றும் அரசு தொழிலகங்கள் கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளன. அதைத்தவிர அணு மற்றும் அனல் மின் நிலையங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. ஆந்திர மாநிலம் தற்போது தென் இந்தியாவில் மிகப் பெரிய தொழில் நகரங்கள் கொண்டதாக அமைந்துள்ளன.
எனவே இந்த பகுதிகளை கண்காணிக்க இந்திய விமானப்படை சோழவரத்தில் முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பழைய விமான ஓடுதளம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அங்கிருந்து அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 55 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது