டில்லி

ச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தனது ஓய்வுக்குப் பின் தனக்கு எந்த அரசுப் பதவியும் தேவை இல்லை எனக் கூறி உள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியில் உள்ளவர் செல்லமேஸ்வர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியது தெரிந்ததே.   அப்போது இவருடன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், லோகுர், குரியன் ஜோசப் ஆகியோரும் உடன் இருந்தனர்.   நீதிபதி செல்லமேஸ்வர் நேற்று டில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்..

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், “நான் வரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.   அதன் பிறகு எனக்கு எந்த ஒரு அரசுப்பணியும் தேவை இல்லை.   நான் எனது ஓய்வுக்குப் பின் எந்த ஒரு அரசுப்பணிக்கும் விண்ணப்பிக்கப் போவதும் இல்லை.

நீதித்துறையில் வழக்குகள் ஒதுக்குவது குறித்து உத்தரவுகளை தலைமை நீதிபதி பொறுப்புடன் அளிக்க வேண்டும்.   வெறுப்பு, விருப்பின் அடிப்படைகளில் வழக்குகள் ஒதுக்கப்படும் போது அந்த அறிவிப்பு நம்பகத் தன்மையை இழந்து விடுகிறது.

தலைமை நீதிபதி மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர முயற்சிக்கப்பட்டு பின் கைவிடப்பட்டது.  நீதித் துறையில் உள்ள குறைகளை களைய வேண்டியது அவசியமே.   ஆனால் நீதித்துறையில் எழுப்படும் கேள்விகள் மற்றும் பிரச்னைகளுக்காக கண்டன திர்மானம் கொண்டு வருவது தேவையற்றது.   அது நிச்சயம் ஒரு தீர்வாக அமையாது” என தனது உரையில் கூறினார்.