சென்னை: மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்க சக்தியை மீறி செயல்படுவேன் என ஆளுநர் உரைக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் என கூறிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 20 மாதங்களை கடந்துள்ளது திமுக அரசு, அதற்குள் இமாலய சாதனைகளை செய்துள்ளோம். காலம் குறைவு, ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம் என முதல்வர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நலனுக்காக சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என கூறியவர், மக்களின் மன மகிழ்ச்சியே திராவிட மாடலின் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டியதுடன், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி கொள்கைகளை செயல்படுத்துவே திராவிட மாடல் என்றார்.

சமூக நீதி தத்துவே திராவிட இயக்கத்தின் அடிப்படை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திராவிட மாடல் ஆட்சி இங்கு நடைபெற்று வருகிறது , வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சமூக வளர்ச்சியும் அடங்கியது, திராவிட மாடல் வளர்ச்சி ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்றவர், மக்கள் மனங்களில் மகிழ்ச்சி திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என்றார். கடந்த 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் நடத்தையால் நடந்ததை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை என்றார்.

நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்கள், மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மதவாத, இனவாத, தீவிரவாத அமைப்புகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. மேலும், குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் ஆதாரத்துடன் கூற வேண்டும், பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது என முதல்வர் தெரிவித்தவர், நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் என வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டியவர்கள்,  நாங்கள் நாத்திகர்கள் என்பதால் கோவில்களை சீரமைக்கவில்லை என்று கூறுகிறார்கள் என்றார்.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்றவர், சட்டப்பேரவைக்கு வந்து உரையாற்றிய ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய ஸ்டாலின், நாள்தோறும் மக்களுக்காக உழைத்து வருகிறேன் என்கிறார்கள், நான் நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன் என்றவர், கடிகாரம் ஓடும் முன் ஓடு என்ற  பாரதிதாசன் வரிகளைகளுக்கு ஏற்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம், யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக நான் ஓடிக்கொண்டிருக்கவில்லை, அது என் இயல்பு என்று கூறியவர், 10 ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த  தமிழ்நாட்டை ஒட வைத்திருக்கிறோம் என்றார்.

15 மாதங்களில் 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்புகளில் 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை ரூ.6 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவது கண்காணிக்கப்படும் என்றும்,  தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. அதனால்தான் முதலீட்டாளர்கள் தேடி வருகிறார்கள்  தமிழ்நாட்டில் மத, இன  தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது என்றும் கூறினார்.