சென்னை:  சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகளை அதிமுக எம்எல்.எக்கள் புறக்கணித்துள்ளனர்.   இன்றை கேள்வி நேரத்தின்போது, கோவையில் சாலைகள் புதுப்பிப்பு, புதுக்கோட்டை மாநகராட்சியாக்க நடவடிக்கை, ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும்  உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்களின்  பல்வேறு கேள்விக்கு அமைச்சர்களை பதில் அளித்தனர்.

 தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்றுடன் கூட்டத்தொடர் முடிவு பெறும் நிலையில், இன்றைய தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்குகிறார். இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று மறைந்த முன்னாள் அமைச்சர் சரத்யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் கல்லூரி அமைப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி,  அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

அதுபோல ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படுமை என அந்த தொகுதி எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறினார். அப்போது,  ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி கூறியதுடன்,  புதிய தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆய்வில் புதிய தொழிற்சாலைகளில் 80% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்  பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

கோவையில் சாலைகள் சரி செய்யப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் கூறிய அமைச்சர் நேரு,  கோவையில் உள்ள அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க ₹200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என எழுப்பப்பட்ட  கேள்விக்கு பதில் கூறிய  அமைச்சர் கே.என்.நேரு ,  புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து, தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.