பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார்.

16 ஆண்டுகால ஹசீனாவின் அவாமி லீக் ஆட்சி மாணவர்களின் எழுச்சி காரணமாக கவிழ்க்கப்பட்டதை அடுத்து ஆகஸ்ட் 5, 2024 அன்று பங்களாதேஷை விட்டு இந்தியாவுக்கு தப்பினார்.

தலைமறைவாக இருந்து வரும் ஷேக் ஹசீனா, 2024 ஜூலை-ஆகஸ்ட் வன்முறை, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் விதவைகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரு மெய்நிகர் உரையாடல் நிகழ்த்தினார்.

காவல்துறையினரின் குடும்பத்தினரை ஆறுதல் படுத்தும் விதமாக பேசிய ஹசீனா, “நான் திரும்பி வந்து எங்கள் போலீஸ்காரர்களின் மரணங்களுக்குப் பழிவாங்குவேன்” என்று கூறினார்.

மேலும், “யூனுஸ் அனைத்து விசாரணை அமைப்புகளையும் கலைத்து விட்டு, மக்களைக் கொல்ல பயங்கரவாதிகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். அவர்கள் வங்கதேசத்தை அழித்து வருகின்றனர்,” என்று குற்றம்சாட்டினார்.

“யூனஸுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் அனுபவம் இல்லை,” என்று கூறிய ஹசீனா, “இந்த அக்கிரமத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடவுள் என்னை மயிரிழையில் உயிர்பிழைக்க வைத்தது நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக” என்றும் கூறினார்.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்தில் ஹசீனாவை வெளியேற்றக் கோரி மாணவர்கள் நடத்திய வன்முறைப் போராட்டத்தைத் தொடர்ந்து, அவாமி லீக் ஆதரவாளர்கள் மற்றும் இந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதாக ‘வங்காளதேசத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 இல் நடந்த போராட்டங்களுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள்’ என்ற தலைப்பில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதேவேளையில், ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு நாடுகடத்த வேண்டும் என்று முகமது யூனுஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

“ஹசீனாவை நாடு கடத்துவது எங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை. ஹசீனாவை நேரில் விசாரிக்க டாக்கா தனது முயற்சிகளைத் தொடரும்” என்று யூனுஸின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.