சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடையே பேசிய சைதை துரைசாமி, “இன்று போகவேண்டாம் என்று எப்போது சொன்னாலும், சரி என்று சொல்லும் மகன் வெற்றி, இம்முறை நான் சொன்னதையும் மீறி கடைசி முறையாக செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றான். அதுவே அவனது கடைசி பயணமாக இருக்கும் என்று நான் ஒருநாளும் நினைக்கவில்லை” என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும், “எனது மகன் மறைந்த போதும் மனிதநேய அறக்கட்டளை மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும் அரசு அலுவலர்களாகவும் வளம் வரும் எனது எண்ணற்ற பிள்ளைகளுக்காக எனது பணி தொடரும்.

மகன் மறைந்ததை நினைத்து மனம் கலங்க மாட்டேன். எனது அறக்கட்டளையில் பயிலும் என்னுடைய மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையோடு நான் இருக்கிறேன். எனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சைதை துரைசாமி கூறினார்.

கடந்த 4ம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் சட்லெஜ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு நேற்று சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்று மாலை அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.