புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்ட, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் குழப்பமாக இருக்கிறார்கள் என்றும், திரைத்துறையினர் அரசியலுக்கு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளனர். அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று கூறினார். மேலும், நடிகர்கள் என்பதால் ஒதுக்க வேண்டியதில்லை என்றும், தனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமல்ல நிறைய இளைஞர்களுக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கூறினார்.

சினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்றாலும் கலையின் மேல் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோருக்கு ஈடுபாடு உண்டு என்று கூறிய பார்த்திபன், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தோர் நிறையப் பேர் உண்டு. இவர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்களோ எனச் சிலர் பயப்படவும் வைக்கிறார்கள். புதிய கட்சியை நான்கூடத் தொடங்கலாமா என்று யோசிக்கிறேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை என்றார்.

விழாவில், கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ தேர்வு செய்யப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.