மதுரை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம், இதனால் என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி வரும் மே 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு தடை போட்டுள்ளது இந்துக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆதின மடங்களில் அரசு தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகஅரசின் இந்த நடவடிக்கைக்கு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பான இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பாரம்பரியமிக்க தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்வு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் நடந்தது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் நடந்துள்ளது. பாரம்பரியமாக நடந்த இந்த பட்டினப் பிரவேசத்தை திடீரென நிறுத்துவது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
முதல்வராக பொறுப்பேற்கும்போது ரகசிய பிரமாணம் எடுப்பதுபோலத்தான், பட்டினப்பிரவேசமும் பாரம்பரியமாக நடந்து வருகிறது. அதை தடுத்து நிறுத்துவது வருத்தமளிக்கிறது. முறைப்படி நடப்பதை தடுக்கக்கூடாது. திருஞானசம்பந்தர் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்தார். நான் அந்த மடத்தின் சிஷ்யன். தருமபுரத்தில் நான் படித்துள்ளேன். தருமபுரம் ஆதீனம்தான் எனக்கு சோறு போட்டு வளர்த்தது. நான் இன்று தேவாரம் பற்றி பேசுவதற்கு தருமபுரம் ஆதீனம்தான் காரணம். தருமபுரம் ஆதீனம் போட்ட பிச்சைதான் நான் இன்று தமிழ்பேசுகிறேன்.
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறும். நானே ஆதீனப் பல்லக்கை தோளில் சுமப்பேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை, பட்டினப்பிரவேசத்தை நடத்தியே தீர்வோம் என்று கூறியவர், இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழக முதல்வர் நேரில் வந்து இந்நிகழ்வை நடத்தவேண்டும்.