சமூகவலைதளமான பேஸ்புக்கில் தற்போது பிரபலமான வார்த்தை, “இணைய பொறுக்கி.”
பிரபல கவிஞரும், தி.மு.க. பேச்சாளருமான மனுஷ்ய புத்திரன், கவிஞர் கடங்கனேரியானை இப்படி விளித்திருக்கிறார். இந்த விவகாரம்தான் பேஸ்புக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், “ஏற்கெனவே சாக்கடைப் பன்றிகள் என்றெல்லாம் சிலரை மனுஷ்யபுத்திரன் விமர்சித்தார். தற்போது இப்படி எழுதியிருக்கிறார் அனைத்து பொது விசயங்கள் குறித்தும் கருத்துக்களைச் சொல்பவர், கவிஞர், முக்கிய கட்சியின் பேச்சாளர், இப்படி பொது வெளியில் கடுமாயான சொற்களை வெளிப்படுத்தலாமா. ” என்ற விமர்சனம் மனுஷ்யபுத்திரன் மீது வைக்கப்படுகிறது.
இது குறித்து மனுஷ்ய புத்திரனிடம் கேட்டோம்.
அவர், “எல்லா எழுத்தாளர்கள் மீதும் அலிகேஷன் இருக்கு. நான் அது பற்றி பேச விரும்பலை.
நாற்பது வருடங்களாக எழுத்துலகில் இருக்கும் நான், இதுவரை ஒரு பெண் எழுத்தாளரை – , ஒரு பெண்ணை – வரம்பு மீறி எழுதியதோ, பேசியதோ இல்லை. அப்படி ஒரு சம்பவத்தையாவது யாராவது என்னை நோக்கிச் சொல்ல முடியுமா.
ஆனால் உயிர் மெய் பதிப்பகத்தில் புத்தகம் எழுதிய பெண்களையும் என்னையும் கடங்கநேரியான் தவறாக எழுதியதால்தான், அதுவரை பொறுமையாக இருந்த நான், இணைய பொறுக்கி என திட்டினேன்” என்றார்.
மேலும், மனுஷ்யபுத்திரன், “நான் பொதுவாக இது போன்ற வார்த்தைகளை பேசவதவோ, எழுதுவதோ கிடையாது. கருத்து சார்ந்த விவாதங்களை, நான் கருத்தியல் ரீதியா எதிர்கொண்டு வந்திருக்கிறேன். பொது அரங்குகளில் நான் எவ்வளவு நாகரீகமாக கருத்துக்களை வெளிப்படுத்துவேன் என்பது உலகத்துக்கே தெரியும்.
விவாதங்களை நான் வரவேற்கிறேன். விவாதம் செய், அதை தர்க்க ரீதியாக நிரூபி.க்கட்டும். நான் வரவேற்கிறேன்” என்றவர்,
“சிலர் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவதூறு செய்கிறார்கள். அவர்களை எப்படி நான் எதிர்கொள்வது? ஒரு ரவுடியை ரவுடி என்றுதான் சொல்ல முடியும். அதை அவதூறு என சொல்ல முடியுமா? அப்படித்தான், பொறுக்கியை, பொறுக்கி என்று சொல்வதும்.
ஒருவன், வீட்டில் புகுந்து திருடுவான், வீட்டின் மேல் கல்லெறிந்துவிட்டு ஓடிவிடுவான் அவனை என்னெவென்று சொல்வது? அவர்களை பொறுக்கி என்றுதானே சொல்ல முடியும்?
இப்படி சொல்லத் தயங்குவது, பொறுக்கிகளை மேலும் தவறு செய்ய ஊக்குவிக்கிறது. என்னவேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பேசலாம்.. யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைக்கிறது.
இரண்டு முறை செருப்பைக் கழற்றி அடித்தோம் என்றால், அவர்கள் திருந்திவிடுவார்கள். நார்மலாக ஆகிவிடுவார்கள்.
என் சொந்த வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். பொது வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்.
நீங்க ஒரு இடத்துக்குப் போயிக்கிட்டிருக்கீங்க. திடீர்னு ஒருத்தன் உங்களை கெட்ட வார்த்தையில் திட்டறான்னு வச்சுக்குவோம். உங்க குடும்பத்தில் இருக்கிறவங்களை தப்பா பேசினா கருத்து சுதந்திரம்னு விட்டுருவீங்களா. செருப்பைக் கழற்றி அடி்பபீங்களா. நான் அப்படி இருக்கிறேன் ” என்று முடித்தார் மனுஷ்ய புத்திரன்.