சென்னை: கல்லூரியில் படிக்கும்பொழுதே பென்ஸ் கார் பயன்படுத்தினேன் என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கூறியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர்மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் கொடுத்த  புகாரின்பேரில், விசாரணை நடத்த  திமுக அரசு லஞ்சஒழிப்புத்துறையை முடுக்கி விட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பல முன்னாள்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு மற்றும் வழக்குகள் பாய்ந்துள்ளன.

இந்த நிலையில், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் செப்டம்பர் 16ந்தேதி லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை 17 மணி நேரம் நீடித்தது. சோதனை முடிவில்,  ரூ.34 லட்சம் ரொக்கமும், ரூ.1.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், ரோல்ஸ் ராயல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப் பொருட்கள், 47 கிராம் எடையுள்ள வைர நகைகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், பல்வேறு வங்கிகளின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு புத்தகங்கள், ரூ.30 லட்சம் மதிப்பிலான மணல் ஆகியவற்றை கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி  “நேரத்தை வீணடிக்கவும், அரசியல் ஆதாயத்தைத் தேடவுமே திமுக அரசு இந்த  சோதனை நாடகத்தை நடத்தி உள்ளது. நாங்கள் (அதிமுகவினர்) பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளோம். இதனால் இதற்கெல்லாம் பயப்படா மாட்டோம்.

லஞ்ச ஒழிப்புதுறையினர் எனது வீடு மட்டுமின்றி,  அதிமுகவைச் சேர்ந்த 5 ஒன்றியச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் வீட்டில் சோதனை நடத்ததி உள்ளனர். இது வரம்பு மீறி செயல்.  இதுவரை அரசியலில் இல்லாத ஒன்று.

இது திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சிமற்றும்  பழிவாங்கும் நடவடிக்கை. உள்ளாட்சித் தேர்தலில் இடையூறுகளை ஏற்படுத்தவே இந்தசோதனை நடத்தப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற சோதனையில் எந்த ஆதாரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் நாங்கள் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியாக சந்திப்போம்’’ என்றார்.

அப்போது செய்தியாளர்கள் ரோல்ஸ் ராயல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளனே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், கல்லூரியில் படிப்பின்பொழுதே பென்ஸ் கார் பயன்படுத்தியவன் என்று  கூறினார்.

அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் 2011 முதல் 2021ம் ஆண்டு வரை ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. கடந்த 2011ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 7 கோடியாக இருந்த நிலையில் பின்னர் 90 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.