சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும்,  முன்னாள் அமைச்சர்  நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சித்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது.

இதன் காரணமாக, சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. ஆனால், சித்துவுக்கு பதவி வழங்கக் கூடாது என அம்ரீந்தர் சிங் உள்பட  மூத்த தலைவரான சுக்பால் கெய்ரா உள்பட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாக காந்தி நியமித்திருப்பதாக, பொதுச்செயலாளர் வேணுகோபால்  ஜூலை 19ந்தேதி அறிவித்தார். அதைதொடர்ந்து, மாநில முதல்வர் பதவியில் இருந்து அம்ரீந்தர்சிங் விலகினார். தொடர்ந்து, சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் மாநிலத்தின் 16-ஆவது முதலமைச்சராக செப்டம்பர் 20ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.  அம்மாநிலத்தின் முதல்வரின் எதிர்ப்பை மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு அம்ரீந்தர்சிங் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், ஒரு மனிதனின்  சரிவு சமரச மூலையிலிருந்து உருவாகிறது, பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாபின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலில் நான் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது.  எனவே பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை நான் ராஜினாமா செய்கிறேன், காங்கிரசுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.